சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும். அதிமுகவுக்கு இந்த நிலை யாரால் வந்தது என தொண்டர்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட வரவு செலவு கணக்கு நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்த வரவு செலவு கணக்கு. இறுதி வெற்றி எங்களுக்குத்தான்.
எங்களால் ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்க முடியுமா என கேட்டார்கள். 88 மாவட்ட செயலாளர்களை நியமித்து இன்று கூட்டம் நடத்தி விட்டோம். பொதுக்குழு முறையாக நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். நாங்கள் இணையக்கூடாது என்ற எண்ணம் எடப்பாடிக்கு மட்டும் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். ேதர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் சின்னம் வழங்கும். எங்கள் மீது தொண்டர்களும், பொதுமக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அதிமுகவை யாராலும் விழுங்க முடியாது. எடப்பாடி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாடம் கூட முறையாக நடக்கவில்லை. பல இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பேர் 6 பேர் பங்கேற்றனர். கூவத்தூரில் நடந்தது போல்தான் பொதுக்குழுவிலும் நடந்துள்ளது. பா.ஜ.க. எங்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறது. அதையே நாங்களும் செய்கிறோம். குஜராத் விழாவுக்கு எங்களை முறைப்படி அழைத்தார்கள். அதனால் பங்கேற்றறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.