திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54), கூலித் தொழிலாளி. இவருக்கும் முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.
கீதா கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் பாலசந்திரன் அடிக்கடி கீதா வீட்டுக்கு சென்று வந்தார். இந்த நி்லையில் கள்ளக்காதலர்கள் இடையே சில நாட்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கீதா, பாலசந்திரனிடம் பேசவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் பாலச்சந்திரன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துக்கொண்டு கீதா வீட்டுக்கு வந்தார். திடீரென அவர் அரிவாளை எடுத்து சரமாரியாக கீதாவை வெட்டித்தள்ளினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கீதாவை முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார்.
கள்ளக்காதலியை கொலை செய்த பின்னரும் பாலசந்திரனுக்கு கொலை வெறி அடங்கவில்லை. சுமார் 5 கி.மீ. தூரம் உள்ள வாளவந்திக்கு டூவீலரில் வந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளையும் டூவீலரிலேயே வைத்திருந்தார்.
அங்கு வாளவந்தி திமுக கிளை செயலாளர் ரமேஷ்(55) ஒரு டீக்கடை அருகே உட்கார்ந்திருந்தார். அவரையும் அதே அரிவாளால் வெட்டித்தள்ளினார். உயிருக்கு போராடிய ரமேசையும் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்தார். 30 நிமிடத்தில் 2 பேரையும் தீர்த்து கட்டிய பாலச்சந்திரன் அரிவாளுடன் ஜம்புநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரமேசுக்கும், பாலசந்திரனுக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாம். இதனால் ஏற்பட்ட பகை வளர்ந்து கொண்டே வந்தது. கள்ளக்காதலியை கொலை செய்ததால் எப்படியும் சிறைக்கு தான் போகப்போகிறோம். ரமேசும் நம்மிடம் தகராறு செய்து கொண்டே இருக்கிறான். அவனையும் கொன்று விட்டு போய்விடுவோம் என எண்ணி 30 நிமிடத்தில் 2 பேரையும் கொடூரமாக செய்து உள்ளார்.
இந்த சம்பவம் முசிறியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.