புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி அடுத்த வி. லட்சுமிபுரத்தில் வசித்து வந்த அழகன் மனைவி அழகி (70), இவரது மகள் அடைக்கம்மை (47). கடந்த 2014 மே 4ம் தேதி இரவு அழகியும், அவரது மகள் அடைக்கம்மையும் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த பனையப்பட்டி போலீஸார், அழகியின் மருமகளான-இலுப்பூர் பெருமாநாட்டைச் சேர்ந்த மணிமுத்து மனைவி சுப்பம்மாள் (55), இவரது மகன்கள் . வெள்ளைச்சாமி (34), பாண்டியராஜன் (37) மற்றும் கட்டியாவயல் கோட்டைக்காரத் தெரு தங்கவேல் மகன் பாண்டி (34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
வெட்டிக் கொல்லப்பட்ட அழகிக்கும், அவரது மகன் மணிமுத்துவுக்கும் இடையே நீண்டகாலமாக சொத்துத் தகராறு இருந்தது. இதற்கிடையே 2013ல் மணிமுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் மனைவி சுப்பம்மாள், மகன்கள் வெள்ளைச்சாமி, பாண்டியராஜன் மற்றும் குடும்ப நண்பரான பாண்டி ஆகியோர் சேர்ந்து, கூட்டுச்சதியில் ஈடுபட்டு சொத்துக்காக இந்தக் கொலையைச் செய்தது புலன் விசாரணையில் தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. ரஜினி, 4 குற்றவாளிகளுக்கும் கொலைக் குற்றத்துக்காக இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்காக ஆயுள் சிறைத் தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார்.
மேலும், 2வது குற்றவாளியான வெள்ளைச்சாமி, 4வது குற்றவாளியான கட்டியாவயல் பாண்டி ஆகிய இருவருக்கும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்ததற்காக தலா ஓர் ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்தார்.
இவற்றில் கொலைக்குற்றத்துக்கான இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், இதர பிரிவுகளில் கொடுக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முதல் குற்றவாளி சுப்பம்மாள், இரண்டாம் குற்றவாளி வெள்ளைச்சாமி ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதமும், 3ம் குற்றவாளி பாண்டியராஜன், 4ம் குற்றவாளி பாண்டி ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக யோகமலர் ஆஜராகி வாதாடினார்