திண்டுக்கல்லைச் சேர்ந்த வர் சூர்யமூர்த்தி . அதிமுக பிரமுகர். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்களை அளித்துள்ளேன்.
குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பி்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில், அந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது சூர்யமூர்த்தியின் மனு தொடர்பாக அ.தி.மு.க.விற்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை பெற்றுள்ளோம் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதேநேரம், தங்கள் தரப்பையும் கேட்ட பின்னரே முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் கோரிக்கை மனுவை தாக்கல் செய்து இருந்தது. அதையும் விசாரித்த ஐகோர்ட்டு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அ.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற மனுவின் மீது 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர். எனவே இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என்று அவர் கூறுகிறார். இருதரப்பினர் ஒரு சின்னத்துக்கு போட்டி போடுவதால் தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என்பதால், இரட்டை இலைக்கு மீண்டும்ஆபத்து நேரிடலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.