தவெக தலைவர் விஜய் நடித்த கோட் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் டோனியை அவமதித்து விட்டதாக அவரது ரசிகர்கள் கொந்தளிக்க துவங்கி உள்ளனர்.
அதாவது, படத்தின் க்ளைமாக்சில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தந்தை விஜயும், மகன் விஜயும் மோதிக்கொள்வார்கள். அப்போது மகனின் பிடியில் அவரது சகோதரி இருப்பார். மைதானத்தின் மேல் பகுதியில் இந்த சண்டை காட்சி நடந்து கொண்டிருக்க கீழே மைதானத்தில் டோனி மும்பைக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருப்பார். கிரிக்கெட்டில் தல என அழைக்கப்படுபவர் டோனி.
மகனின் பிடியில் இருந்து மகளை தப்ப வைக்க எதிரில் நிற்கும் தந்தை விஜய், மகளுக்கு ஒரு யோசனை சொல்வார். அதாவது தலையால் பின்னால் முட்டி அண்ணனை நிலை குலைய வைக்க வேண்டும் என்பதற்காக, நீ யாருடைய பேன்(தல) என தந்தை விஜய் கேட்பார். உடனே மகள் ஆக்ரோஷமாக தல பேன் என்பார். அப்போது படம் பார்க்கும் எல்லோரும் கீழே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் டோனியை தான் சொல்வதாக நினைப்பார்கள். காரணம் விஜயின் மகள் சிஎஸ்கேவின் மஞ்சள் உடையணிந்து கிரிக்கெட் பார்க்க வந்திருப்பார். ஆனால் அவர் தல பேன் என சொல்லும் போது, பின்னணியில் அஜீத்தின் மங்காத்தா பட இசை ஒலிக்கும். இதன்மூலம் அஜித் ரசிகர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக டோனியை அவமானப்படுத்தி விட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. கீழே டோனி விளையாடிக்கொண்டிருக்கும் போது, அவரை பற்றி குறிப்பிடாமல், அஜீத்தின் இசையை ஒலிக்க விட்டது ஏன் என சிஎஸ்கே ரசிகர்கள் குமுறுகின்றனர்.