Skip to content

பதவியேற்றதும் அதிரடிகளை தொடங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் (78), ஜனநாயக கட்சி வேட்பாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிசை வென்றார். இதன் மூலம், 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் 2வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிய அதிபர் பதவியேற்பு விழா  அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று இரவு இந்திய நேரப்படி இரவு 10. 30 மணிக்கு நடந்தது.  கட்சியினரும் ஆதரவாளர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியை நேரில் காண கேபிடல் ஏரினா அரங்கில் பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு  கடும் குளிரிலும் ஏராளமானோர் குவிந்தனர்.

பாரம்பரிய வழக்கப்படி, பதவியேற்புக்கு முன்பாக டிரம்ப், செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனையுடன் தனது  பதவியேற்பு  தினத்தை தொடங்கினார். இதில், டிரம்புடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். பிரார்த்தனையைத் தொடர்ந்து, அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் தனது மனைவியுடன் சென்றார். அவர்களுடன் துணை அதிபராக பதவியேற்கும் ஜே.டி.வன்ஸ் அவரது மனைவி இந்திய வம்சாவளியான உஷா வன்ஸ் ஆகியோரும் உடன் சென்றனர்.

அங்கு அவர்களை, அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடனும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாபும் கட்டித்தழுவி வரவேற்று தேநீர் விருந்து அளித்தனர். அதிபர் பைடனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால், வெள்ளை மாளிகையில் அவரது கடைசி நிகழ்வாக இந்த தேநீர் உரையாடல் அமைந்தது. சிறிது நேரம் உரையாடிய பின், நாடாளுமன்றத்திற்கு டிரம்பை, பைடன் அழைத்துச் சென்றார். கேபிடால் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா விமரிசையாக நடந்தது.

இதில், முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோரும், உலகின் முன்னணி தொழிலதிபர்களான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஆப்பிள் தலைவர் டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி மற்றும் பல்வேறு உலக தலைவர்களும்  விழாவில் பங்கேற்றனர். முதலில் ஜே.டி.வன்ஸ் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உடனடியாக மரைன் பேண்ட் குழுவினர் தேசிய கீதத்தை இசைக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புதிய அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய அதிபராக டிரம்ப் நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையாற்றினார். அதன் பின், பதவி விலகும் அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை நாடாளுமன்றத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கும் வழியனுப்பு விழாவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. புதிய அதிபராக பதவியேற்ற சில மணி நேரத்திலேயே டிரம்ப், தனது அலுவலகத்திற்கு சென்று 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். உச்ச அதிகாரம் படைத்த நாடான அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது அடுத்த 4 ஆண்டுகால ஆட்சி பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பதவி ஏற்ற பின் டிரம்ப் ஆற்றிய   முதல் உரையில்  பல அதிரடிகளை அறிவித்தார். அவரது உரை விவரம்:   உலக நலனுக்காகவே இறைவன் என்னை காப்பாற்றினார்.

அமெரிக்காவின் சரிவு காலம் முடிந்து பொற்காலம் தொடங்குகிறது. இன்று முதல் உலகம் முழுவதும் மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மாறும். ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் விடுதலை தினமாக கடைப்பிடிக்கப்படும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மீட்கப்படும். அமெரிக்காவை இதுவரை இல்லாத அளவுக்கு வலுவானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் நீடிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படும். உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் உருவெடுக்கும். சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க தென்எல்லையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. சட்டவிரோதமாக குடியேறிவர்களை அவர்கள் நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பனாமாவை இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குகீழ் கொண்டு வருவோம்.அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம். அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம். செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.