கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டும், சேவை மருத்துவர்கள் மீது நடைபெறும் கொலை வெறி தாக்குதல்களை கண்டித்தும், இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. எமர்ஜென்சி கேஸ்கள், எமர்ஜென்சி ஆபரேசன்கள் மட்டும் இன்று நடைபெறும் . நகரங்கள் தோறும் இன்று மருத்துவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.அரசு ஆஸ்பத்திரிகளில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது என அறிவித்துள்ளனர்.
அதன்படி மயிலாடுதுறையில் அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு டாக்டர்கள், ஐஎம்ஏ டாக்டர்கள் இணைந்து இந்த போராட்டம் நடத்தினர்.
இந்திய மருத்துவக் கழக தமிழ்நாடு கிழக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார், இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் டாக்டர் சௌமித்யா பானு ,பொருளாளர் டாக்டர் அருண்குமார்,
சீர்காழி அரசு தலைமை மருத்துவர் அறிவழகன், மற்றும் மருத்துவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், சிவக்குமார், முத்து உட்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.இதுபோல அனைத்து நகரங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது