சென்னையில் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அருளீஸ்வரன் தலைமையில், திருச்சி இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) ஆகியோர் இணைந்து, கருப்புப் பட்டைகள் அணிந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அருளீஸ்வரன் , இந்த போராட்டம் குறித்து கூறியதாவது:
மருத்துவர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடரும். அரசிடம் இருந்து உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை, திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள், ஆய்வு கூட்டங்கள் மற்றும் வெளிப்புற மருத்துவ முகாம்கள் செல்வதை தொடர்ந்து புறக்கணிப்போம்.
‘திருச்சியில் நாளை கூடும் செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும்’ . அனைத்து அரசு மருத்துவமனையிலும் தனியார் பாதுகாவலர்கள் நியமிப்பதை தவிர்த்து போலீசார் நியமனம் செய்ய வேண்டும். சிக்கலான சிகிச்சைகளிலும் மேற்கொள்ளும் அரசு மட்டும் தனியார் மருத்துவமனைகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.