மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் யுகேஷ். இவர் குத்தாலத்தில் தனியார் மருத்துவமனை கிளினிக் நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்கு சென்ற மருத்துவர் யுகேஷ் கிளினிக்கின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை பணி முடிந்து குத்தாலத்தில் இருந்து வீடு திரும்பும் போது சேத்திரபாலபுரம் என்ற இடத்தில் பைக்கில் வந்து
கொண்டிருந்த போது வண்டியின் ஸ்பீடாமீட்டர் பகுதியில் இருந்து பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது. இதைக் கண்டு பதறிப்போன மருத்துவர் அலறி அடித்துக் கொண்டு வண்டியை நிறுத்தி சாலையில் போட்டுள்ளார். பத்து நிமிடங்கள் கடந்த பின்னரும் பாம்பு வெளியே வராததால் அருகில் இருந்த தீயணைப்பு துறை அலுவலகத்தின் உதவியை நாடினார். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஸ்பீடா மீட்டர் பகுதியில் ஒளிந்திருந்த பாம்பை வெளியேற்ற டீசலை ஊற்றி முயற்சித்தனர். ஆனாலும் பாம்பு வெளியேறாததால் மெக்கானிக்கை அழைத்து ஸ்பீடா மீட்டரை கழற்றினர். அரை மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு வண்டியில் இருந்து வெளியேறி தப்பிஓட முயன்ற பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அதன் பிறகே மருத்துவர் யுகேஷ் நிம்மதி பெருமூச்சு விட்டார்.