சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான திரு. எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன்.அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் திரு. பத்ரிநாத் அவர்கள் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் ‘பத்மபூஷன்’ விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கர நேத்ராலயா மூலம் திரு. பத்ரிநாத் அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா அவர்கள் பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் திரு. பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு.
திரு. எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.