சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது டாக்டரின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் காரணமாக ஏற்பட்டது என்றும், எனவே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)-இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள் போலீசில் அளிக்கும்போது போலீஸார், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவு… டாக்டர்கள் மீதான புகார்களுக்கு முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும். மூத்த அரசு மருத்துவரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர் கருத்து பெற வேண்டும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304(A)இன் கீழ் குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால், மேல் நடவடிக்கைக்கு முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும். சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம்சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நட வடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சிகிச்சையின்போது நோயாளி மரணம் அடைந்தால் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழிமுறை என்ன?
- by Authour