சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்கான அழைப்பிதழ்களை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வழங்கி வந்தார். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை புரட்டிப்போட்டது. அங்கு அமைச்சர்கள், திமுகவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் 2-வது முறையாக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.