மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசு & மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில், ”பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாட்டையே வன்முறையின் பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க பாஜக அரசு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் எங்கு எந்த பெண்களுக்குப் பிரச்சனை என்றாலும் நாங்கள் குரல் எழுப்புவோம். பாஜக ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவத்தைத்தான் தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் வன்முறை நடந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் ஒரே நாளில் கலவரம் வெடிக்கவில்லை. அங்கு ஆண்டாண்டுகளாகப் பிரச்சனை நடக்கிறது. மக்களின் உணர்வுகளை மணிப்பூர் மாநில முதல்வர் புண்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் மணிப்பூர் முதல்வர் பேசி வருகிறார். வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மணிப்பூர் கலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?. மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு எதிராக பாஜக முதலமைச்சர் பிரேன் சிங் செயல்பட்டு வருகிறார்” என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு எம்.சி, திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிரணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, எம்எல்ஏ தமிழரசி மற்றும் மகளிர் அணியைச் சார்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.