தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ளது நெய்குன்னம். இப்பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் கலைவாணன் (30). பைனான்சியர். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் சகோதரி மகன்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் கலைவாணன் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டாரை போடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த சிலர் அரிவாளால் கலைவாணனை கழுத்து, கை,தலை என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த கலைவாணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தண்ணீர் பாய்ச்ச சென்ற கலைவாணன் வெகு நேரமாக திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வயலுக்கு வந்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் கலைவாணன் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடன் பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கலைவாணன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கலைவாணனுக்கும், சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசா தரப்பில் சந்தேகப்படுகின்றனர்.