Skip to content
Home » தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு…… திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு…… திமுக குற்றச்சாட்டு

  • by Authour

மக்களவைத் தேர்தல் 2024 – உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக தேர்தல் பிரசார கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி., ராமலிங்கம் ஆகியோர் பேசினர்.  திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன்  இதில் பேசியதாவது:

முதலமைச்சர் ஸ்டாலினின் குரல் இந்தியா முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது. எனவே, தேர்தல் இனி தொடர்ந்து நடைபெற வேண்டுமா என்பதை தீர்மானிக்கின்ற முக்கியமான தேர்தல் இது. மகளிர் உரிமைத் தொகை, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை என திமுகவின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1,10,000 பேர் இருக்கின்றனர். எனவே, இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இன்னும் 25 ஆண்டுகாலத்துக்கு திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு 9 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு பொருளாதாரம், கல்வி, வேளாண்மை, விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. 10 வருட பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி அரசு பெருமுதலாளிகளுக்கு 14லட்சம் கோடி ரூபாயை கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாய விளைபொருள்களுக்கு மத்திய அரசு உரிய விலையை தர மறுக்கிறது.

மத்திய அரசு விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் ரூ.1 லட்சம் வழங்கி குலத்தொழிலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. குலத்தொழில் முறையை  பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மாற்றினர். அதனால்தான் திராவிட மாடல் என்று சொன்னால் மோடிக்கு எரிகிறது. கை கட்டி வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த என்னை, ‘டை” கட்டி துணைவேந்தர் ஆக்கியவர் தலைவர் கலைஞர். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியன மத்திய அரசின் கூண்டுக்கிளிகளாக மாறிவிட்டன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் கூறுகிறார். இந்த மூன்றையும் விட மிக ஆபத்தானது ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் இந்தியாவின் பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமர்வார். அப்போது நமது முதல் கோரிக்கை ஆளுநர் பதவியை அரசியல் சட்டத்தில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்பதுதான். தமிழகத்தின் பல்நோக்கு கலைஞர் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்து வசதிகளுடன் உள்ளது என குஜராத்தில் இருந்து வந்திருந்த மருத்துவ அதிகாரிகள் வியந்து பாராட்டியுள்ளனர்.

மத்திய அரசின், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இறந்துபோன 10,000 பேருக்கு மருத்துவம் பார்த்ததாக கூறி உதவித்தொகை வாங்கியுள்ளனர். குடியுரிமைச்சட்டத்தைக் கொண்டுவந்து மதத்தின் பெயரால் வெறுப்பை விதைக்கும் மோடியை ஆதரித்துவிட்டு எந்த நம்பிக்கையில் அதிமுக இஸ்லாமியர்களிடம் வாக்கு கேட்கிறது? விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த 3 சட்டங்களையும் ஆதரித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி எதற்காக இன்று பச்சை துண்டு அணிந்து செல்கிறார்?. கடந்த 2 வருடத்தில் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது திமுக அரசு .

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *