இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று இப்போதே அச்சிடப்பட்டு விட்டது. இந்த நிலையில் இன்று டில்லியில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அரசியல் சாசனத்திலேயே பாரதம் என்ற பெயர் உள்ளது; அதனால் பாரத் என்ற பெயரை எதிர்க்க முடியாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி ‘இந்தியா’ என பெயர் வைத்துள்ளதால் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது. பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.” என்று கூறினார்.