நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டம் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கினாலும், சில நாட்களில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு கூட்டம் இடம் மாற்றப்படும் என்பது ஒரு சிறப்பு.
அத்துடன் ஒவ்வொரு கூட்டமுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றாலும், இந்த மழைகால கூட்டத்தொடரில் இடி முழக்கம், மின்னலுக்கு பஞ்சம் இருக்காது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளனர். அடுத்தாக பெங்களூரிலும் வரும் 17ம் தேதி கூட இருக்கிறார்கள்.
இந்த கூட்டம் முடிந்த சூட்டோடு சூடாக 20ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்க பொதுப்பிரச்னைகள் ஏராளமாக இருந்தபோதிலும், திமுகவைப் பொறுத்தவரை, கவர்னர் ரவியின் விதி மீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை எழுப்பி, கவர்னர்கள் தங்கள் மனம்போன போக்கில் செயல்படுவதற்கு மூக்கணாங்கயிறு கட்டும் நடவடிக்கையில் திமுக எம்.பிக்கள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பிக்கள் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன்
மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் கூட்டம் நடந்தது.
நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, கவர்னர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், தமிழ் மக்களுக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான கருத்துக்களை அவர் வெளியிடுவது குறித்தும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். திமுக எழுப்பும் இந்த குரல் மூலம் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டது.
அடுத்ததாக பொது சிவில் சட்டம் உட்பட பல முக்கிய விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். ஏனென்றால் மக்களவையில் நாம் 3வது பெரிய கட்சி. எனவே நமது குரல் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஓங்கி ஒலிக்க வேண்டும் , இந்தியாவுக்காகவும், தமிழகத்துக்காகவும், தலைநகரில் தமிழனின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது உள்பட பல பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.