நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. புதிய கல்வி கொள்கை குறித்து நடந்த விவாதத்தின் போது, தமிழக எம்.பிக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுகவினர் அநாகரீகமானவர்கள். ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை இன்றி செயல்படுகிறார்கள். அவர்கள் அம்மாநில மக்களுக்கும் நியாயமாக இல்லை என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பிக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பின்னர் அவர் தனது பேச்சை திரும்ப பெற்றார். தமிழர்கள் குறித்து மந்திரியின் தரக்குறைவான பேச்சு அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியதும், மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. திமுக எம்.பிக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து இரு அவைகளுக்கும் வந்திரு்தனர்.
இரு அவைகளிலும் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மன்னிப்பு கேள், நாவை அடக்கு, ஆணவப் பேச்சை நிறுத்து, தமிழ் எங்கள் உயிர், தீயை தீண்டாதே தமிழரை சீண்டாதே போன்ற பதாகைகள் உடன் கோஷங்கள் எழுப்பினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், விஜய் வசந்த் உள்ளிட்ட அனைத்து எம்.பிக்களும் இதில் பங்கேற்றனர்.