தமிழக சட்டசபையில், அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்தபோது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார். தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியதாகவும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதம் சபை விதிமுறையை மீறிய செயல் என குற்றம் சாட்டி வரும் திமுக, இது தொடர்பாக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவே அவர்கள் டில்லி சென்றனர்.. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டில்லியில் உள்ளார். டில்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நாளை காலை 11.45 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்.பி.க்கள், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிக்க உள்ளனர்.