புதுச்சேரி சட்டபேரவை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை உரை நிகழ்த்தினார். பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை சட்டபேரவை குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி 3-ந்தேதி கூடுகிறது என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார். அதன்படி இன்று காலை சட்டமன்றம் கூடியது. திமுக எம்.எல்.ஏக்கள் 6 பேரும் சிவா தலைமையில் சைக்கிளில் பள்ளிக்கூட மாணவர்களை போல சீருடை அணிந்து வந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கப்படாததை கண்டித்து எம்.எல்.ஏக்கள் இன்று மாணவர்களைப்போல சைக்கிளில் சீருடை அணிந்து சட்டமன்றம் வந்தனர். இந்த காட்சி புதுவை மக்களை பெரிதும் கவர்ந்தது. மக்கள் எம்.எல்.ஏக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
புதுவை சட்டசபையில் 12 ஆண்டுகாளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.