Skip to content
Home » திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி…?

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி…?

  • by Senthil

கூட்டணி குறித்து முடிவு எடுக்க மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் நேற்று  ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில், ‘இண்டியா கூட்டணி’ 18-ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையில் இயங்கி வரும் ‘இண்டியா கூட்டணி’ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு, மதிமுகவுக்கு ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை இடத்தைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். அந்த பதவிக்காலம், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அந்த மாநிலங்களவை இடத்தை மீண்டும் மதிமுகவுக்கு அளிக்க திமுக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தையின்போது, மதிமுகவுக்கு திருச்சி மற்றும் விருதுநகர் தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதில் திருச்சி தொகுதி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இதில் துரைவைகோ போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தமுறை மதிமுகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தங்களது கட்சியின் சின்னமான பம்பரம் அல்லது ஏதாவது ஒரு தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் வலியுறுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!