திருநெல்வேலி மாவட்டம் சிஎஸ்ஐ விவகாரத்தில் ஞான திரவியம் எம்.பி. தலையிடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று சிஎஸ்ஐ மதபோதகர் ஒருவர் தாக்கப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீப் போல் பரவின. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஞான திரவியம் எம்.பி. மீதும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், திருநெல்வேலி எம்.பி ஞான திரவியத்திற்கு திமுக கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்க தவறினால் ஞானதிரவியம் எம்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.