Skip to content

விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்

விக்கிரவாண்டி தொகுதி  திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு கடந்த  10-ம் தேதி இடைத்தேர்தல்  நடத்தப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா  மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.  பாஜக மற்றும் என்டிஏவில் உள்ள  கட்சிகள் பாமகவை  ஆதரித்தன.

விக்கிரவாண்டியில் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு மையத்துக்கு ஆர்வத்துடன் சென்ற வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தினர். இத்தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.

95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 பேர்  வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 572 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டன.

இன்று காலை 8 மணிக்கு  பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  வாக்குகள் எண்ணப்பட்டன.   முதல் சுற்றில் இருந்து  அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா   அதிக வாக்குகள்  பெற்று முன்னணியில் இருந்து வருகிறார். தபால் வாக்குகளிலும் திமுகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன.  மொத்தம் உள்ள 782 தபால் வாக்குகளில் திமுக 494, பாமக 217, நாதக 45 வாக்குகள் பெற்றிருந்தனர். 8வது சுற்று முடிவில்  முக்கிய வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் விவரம்:

அன்னியூர்  சிவா(திமுக) 69,855,

அன்புமணி(பாமக)30,421

அபிநயா(நாதக) 5,566

மொத்தம் 17 சுற்றுகள் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. 8வது சுற்றிலேயே திமுக வேட்பாளர் 39,434 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.  தற்போதுவரை அனைத்து சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் அமோகமாக ஓட்டுகள் வாங்கி வருவதால் அவர் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. பாமக தவிர  மற்ற அனைத்து வேட்பாளர்களும்(நாதக உள்பட) டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவின் இந்த அமோக வெற்றியை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர்  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  அறிவாலயம் மன்பும் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடினர். திமுக அரசின் திட்டங்களால் திமுக அமோகமாக வெற்றி பெற்றதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும்  கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல இந்தியா முழுவதும் மற்ற  மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் இந்தியா கூட்டணியே அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது.

விக்கிரவாண்டி வெற்றி செய்தி வந்து கொண்டிருந்த நிலையில்  பகல் 12 மணிக்கு  முதல்வர் ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.

விக்கிரவாண்டி தொகுதி முன்னணி குறித்து  அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

இந்த வெற்றிக்கு காரணம் தளபதி ஸ்டாலின் சாதனைகள் தான்,  மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், இலவச பேருந்து திட்டம்,  சாதனைகளை  மக்களிடம் சொல்லுங்கள்  என்றார் முதல்வர் . ஆனால்  மக்களே அவற்றை தெரிந்து கொண்டு தெளிவாக வாக்களித்து உள்ளனர்.  அனைத்து மக்களுக்கும்  திட்டங்களை சிறப்பாக  செய்துள்ளார். அதற்கான அங்கீகாரம் தான் இந்த  ஓட்டுகள்.   மறைந்த புகழேந்தியும் சிறப்பாக அங்கு பணியாற்றினார்.  விக்கிரவாண்டி தொகுதியிலேயே மருத்துவ கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.  கடந்த தேர்தலில் 9 ஆயிரம் ஓட்டுகள் தான் அதிகம் பெற்றோம். ஆனால் இப்போது மிக  அதிக ஓட்டு பெற்றுள்ளோம்.  2026ல் தமிழக முதல்வர் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற  இந்த வெற்றி உதவும். என்னை  தேர்தல் பொறுப்பாளராக முதல்வர் நியமித்தார்.   இந்தியா கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணிக்கு கிடைத்த வெற்றி தான் விக்கிரவாண்டி வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரதில் வாக்கு எண்ணும் மையம் அருகே பாமகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பணம், பொருள் எதுவும் கொடுக்காமல் பாமக அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி அவர்கள் பட்டாசு வெடித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!