நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகளின்படி தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாடாளுமன்ற தொகுதி வாரியாக இன்று முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடந்தது. குழுவின் தலைவரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார். குழுவில் இடம் பெற்றுள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
* தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு செல்லும் நகரங்கள் தேதிவாரியாக வருமாறு:
வரும் பிப்ரவரி 5ம் தேதி -தூத்துக்குடி, 6ம் தேதி -கன்னியாகுமரி, 7ம் தேதி -மதுரை, 8ம் தேதி -தஞ்சாவூர், 9ம் தேதி- சேலம்,
10ம் தேதி- கோவை, 11ம் தேதி -திருப்பூர், 16ம் தேதி- ஓசூர், 17ம் தேதி -வேலூர், 18ம் தேதி -ஆரணி, 20ம் தேதி -விழுப்புரம்,
21, 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர் என திமுக தலைமை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு முக்கிய நகரங்களான திருச்சி, கரூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லவில்லை. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.