மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது, தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, தமிழக எம்.பிக்கள் அநாகரிகமாக பேசுகிறார்கள் என்றார்.
அவரது இந்த பதிலால் திமுக எம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆவேசமடைந்தனர். உடனடியாக அவர்கள் எழுந்து தர்மேந்திர பிரதானுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ மைச்சரின் இந்த பேச்சு பிரதமர் மோடிக்கு ஏற்புடையதா என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் பிரதானின் இந்த அநாகரிக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
தர்மேந்திர பிரதானே மன்னிப்பு கேள், என தமிழ்நாடு முழுவதும் அவரது உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை முன் திமுகவினர், பொதுமக்கள் திரண்டு தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை தீவைத்து எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த போராட்டததில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், மற்றும் கவுன்சிலர்கள், கிளை கழக செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.