மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதியை தாராளமாக அள்ளி விட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு ஒரவஞ்சனையான பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளது.
இந்த பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரி்விக்கும் வகையில் போர்க்கோலம் பூண்டனர். அத்துடன் 27ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தையும் தி்முக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மற்றும் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளும்படி திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சிறப்பாக செய்திடும்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.