மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் ‘மகளிர்உரிமை மாநாடு’ நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நாளை (அக்.14) நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதை முன்னிட்டு, அனைத்து ஏற்பாடுகளையும் திமுக மகளிரணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வருவதால், சென்னையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.