நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் எந்த கட்சியும் இன்னும் வேட்பாளர் பட்டியல் நிறைவு செய்யவில்லை. பெரும்பாலான கட்சிகள் கூட்டணியைக்கூட முடிவு செய்யவில்லை.
திமுகவை பொறுத்தவரை இன்னும், காங்கிரஸ் கட்சிக்கும், மதிமுகவுக்கும் மட்டுமே தொகுதி பங்கீடு இறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. வருகிற 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில் 20ம் தேதி மாலை திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார்.
அதைத்தொடர்ந்து 22ம் தேதி(வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தொடங்குகிறார். 22ம் தேதி மாலை திருச்சி சிறுகனூரில் திருச்சி மதிமுக வேட்பாளர், பெரம்பலூர் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த பிரசார தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு, புதுவையில் சூறாவளி பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.அடுத்த (ஏப்ரல்)மாதம் 17ம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அன்றைய தினம் தஞ்சையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.