தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி வ. உ. சி நகரைச் சேர்ந்தவர் அறிவுமணி (55). திமுக மாவட்ட பிரதிநிதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமுக பேரூராட்சித் தலைவர் சுந்தரத்தமிழ் என்பவரின் கணவர் ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி உறுப்பினர் சேகர் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி அறிவுமணி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் அறிவுமணியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அறிவுமணியை வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து பேராவூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேதில் முன்விரோதம் காரணமாக சேகர், ஜெயபிரகாஷ், ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் ராம்குமார் அரிவாளால் வெட்டியதாக புகார் மனுவில் அறிவுமணி தெரிவித்திருந்தார். அதன்படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.