நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தற்போது அமலாக்கத்துறை என்பது அமலாக்கத்துறை இல்லை. அமுல், மாமூல் துறையாக உள்ளது.அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது.
கொடநாடு ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது. தனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் எப்படி மின்சாரம் தடைபட்டது? எப்படி கொலை நடந்தது? அவரது கார் ஓட்டுநரின் சகோதரர் கொடுத்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது.
இவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். துணிந்து அவர் சொல்வதை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் 14 பேர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் போல கொடநாடு கொலை சம்பவம் ஆகிவிடக்கூடாது.விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். தம்பி விஜய் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன். ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறு இல்லை. அது அவருடைய சொந்த விருப்பம்.
என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட பணியில் இல்லை. இவர்கள் தமிழ்நாட்டில் இடம் வாங்கிக் கொண்டு விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு ஏன் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளாக நடந்து கொள்கிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசை வெளியேற்றினால் திமுகவை ஆதரிக்கத்தயார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து சீமான் மீது புகார் அளித்து வருவது குறித்து கேட்டபோது, அவர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து தான் வருகிறார். வைக்கட்டும் பார்க்கலாம் .
இவ்வாறு அவர் கூறினார்.