தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(20ம் தேதி) தொடங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. திமுகவை பொறுத்தவரை 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் நாளை(புதன்) காலை வெளியிடப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த பட்டியலை அறிவிக்கிறார். அதைத்தொடர்ந்து 22ம் தேதி திருச்சி சிறுகனூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். இங்கு திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பேசுகிறார்.
இதுபோல அதிமுகவும் நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. அதிமுக கூட்டணியில் பிரதான கட்சிகள் இடம் பெறவில்லை. தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கியது போக சுமார் 35 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தெரிகிறது. 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். 24ம் தேதி மாலை திருச்சி அடுத்த வண்ணாங்கோவிலில் திருச்சி, பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.