தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசும்போது, 14எம்.பி. தொகுதி , ஒரு ராஜ்யசபா தொகுதி தரும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
இன்று பேட்டி அளித்த பிரேமலதா கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதி, 1 ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருபவர்களுடன் கூட்டணி என்பது எனது கருத்தோ, கட்சியின் கருத்தோ கிடையாது. இது மாவட்டச்செயலாளர்களின் கருத்து.
2014 மக்களவை தேர்தலில் தேமுதிக 14 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. அதுபோல இப்போதும் 14 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் வலியுறுத்தினார்கள். இதைத்தான் நான் கூறினேன். 14 பிளஸ் 1 தொகுதி வேண்டும் என நான் கேட்கவில்லை. தொண்டர்கள் கூறியதை நான் கூறியதாக சொல்லக்கூடாது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.