நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. அதிமுக கூட்டணியில் சேர்வதா, அல்லது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுடன் சேர்வதா என்பது குறித்து முடிவு செய்ய இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் 79 மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் உள்பட சுமார் 100 பேர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்துக்கு வந்த பிரேமலதா , விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கூட்டம் நடைபெறுவதையொட்டி விஜயகாந்த் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கூட்டம் தொடங்கியதும் சில நிர்வாகிகள் பேச அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் கட்சிக்கு 4 மக்களவை தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். இதற்கு குறைவாக தந்தால் அதை ஏற்க கூடாது என்ற கருத்துடன் பேசினர்.
தொடர்ந்து பேசிய அனைவரும் இதே கருத்தை வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து கூட்டணி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இனி வரும் சில நாட்களில் பிரேமலதா பல கட்சிகளுடன் பேசி தங்கள் கோரிக்கையையும் ஏற்கும் பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி முடிவு செய்து அறிவிப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.