நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பாஜக தரப்பில் கதவு, ஜன்னல்கள் எல்லாம் திறந்தே இருக்கிறது என்று அறிவித்தபோதிலும் யாரும் உள்ளே செல்லவில்லை.
இதே நிலைதான் அதிமுகவிலும் நிலவுகிறது என்றபோதிலும் அதிமுக உயர்மட்டத் தலைவர்கள் பாமக, தேமுதிகவை தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். அந்த வகையில் நேற்று இரவு அதி்முக உயர்மட்டக்குழு தலைவர்கள் சிலர் சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேமுதிக சார்பில் 10 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களைவும் கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக சார்பில் 5 மக்களவை தொகுதி மட்டும் தருவதாகவும், தேர்தல் களத்தில் பல உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தொகுதிகளை கண்டிப்பாக தரவேண்டும் என தேமுதிக வலியுறுத்தியதாம். அதற்கும் அதிமுக மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதவிர வேறு 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்குவதாகவும், உத்தரவாதம் தரப்பட்டதாம். அதற்கு பிரேமலதா சம்மதம் தொிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கட்சி உயர்மட்ட நிர்வாகி்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என பிரேமலதா கூறினாராம்.
எனவே அதிமுக- தேமுதிக கூட்டணி விரைவில் முடிவாகும் என கூறப்படுகிறது. இதுபோல பாமகவும் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க இருக்கிறது பாமகவுக்கு ஒரு மாநிலங்களவையும் தருவதாக அதிமுக முடிவு செய்திருக்கிறதாம்.