தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 9ம் தேதி முதலர் 14ம் தேதி வரை திருச்சி கோட்டத்தில், ரயில்களில் அதிகமான பயணிகள் பயணித்தனர். ஆனாலும் பயணிகள் சிரமமின்றி, வசதியாக பயணிக்க திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசலிலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணித்து தீபாவளி திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடினர். இந்த காலகட்டத்தில் திருச்சியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் பயணித்தனர். விழுப்புரத்தில் 1.1 லட்சம் பேரும், கும்பகோணத்தில் 1 லட்சம் பேரும் ரயில்களில் பயணித்தனர்.
திருச்சி கோட்டத்தில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 7 லட்சம் பயணிகள் ரயில்களில் பயணித்தனர். அவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே கமர்சியல் அதிகாரிகள் கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான பயணிகள் சிரமமின்றி, அசம்பாவிதம் இன்றி பயணிக்க முடிந்தது.
பட்டாசுகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை ரயில்களில் கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. அவ்வப்போது ரயில்களில் இது தொடர்பாக சோதனைகளும் நடத்தப்படுகிறது. அப்படி இருந்தும் தீபாவளி நேரத்தில் பட்டாசுகள் எடுத்து சென்றதாக திருச்சியில் 2 வழக்கும், கும்பகோணத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
பயணிகள் ரயில்களில் பாதுகாப்பாக வசதியாக பயணிக்க வேண்டும். இதுவே ரயில்வே அதிகாரிகளின் விருப்பம். எனவே பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்க கூடாது. ரயிலில் புறப்படும்போது ஓடிவந்து ஏறக்கூடாது. ஆனாலும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணித்தவர்கள் 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வழக்குகள் குறைவு . இதற்கு காரணம் எங்கள் ரயில்வே ஊழியர்கள், ஆர்பிஎப் படையினரின் சிறப்பான பணிதான்.
வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருநாட்களிலும் இதே போன்ற எங்களின் நடவடிக்கை தொடரும். அதன்மூலம் பயணிகள் மகிழ்ச்சியுடன், அசம்பாவிதம் இன்றி செல்லலாம். இந்த தகவல்களை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்தார்.