மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை, அதே நகரை சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம்.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் கொஞ்ச காலம் அமெரிக்காவில் இருந்தனர். அவர்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண் கடந்த 2005ல் மும்பை திரும்பினார். அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது கணவர் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், ஜீவனாம்சம் கோரியும் அந்தப் பெண் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1994ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை எனது கணவர் என்னை பல்வேறு வகையிலும் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்.
நான் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன் என்பதால், அவர் என்னை ‘செகண்ட் ஹேண்ட்’ என்று கூறி கொச்சைப்படுத்தினார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்தும், ஜீவனாம்சமும் வேண்டும்’ என்று கோரினார்.
இவ்வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் முடிந்து, அங்கிருந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் பிறப்பித்த உத்தரவில், ‘பாதிக்கப்பட்ட பெண் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அதனால் அவருக்கு அதிகளவில் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்ப வன்முறை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. பிரிந்து வாழும் மனைவிக்கு 3 கோடி ரூபாய் இழப்பீடும், மாதம் 1.5 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகையும் கணவர் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.