புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தல் நேரம் காரணமாக இவர்கள் பணிமர்த்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு இந்த ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் எனக்கோரி, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
,இந்த நிலையில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், பணீநிக்கம் செய்யப்பட்ட 1,500 பேரில் 700 பேர் கடந்த 2015 முதல் 2016-ம் ஆண்டு வரை ஓராண்டு காலம் பொதுப்பணித்துறையில் ஊதியம் பெற்றதன் காரணமாக அந்த 700 பேர் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தார்.
மீதம் உள்ளவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் எனக்கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பணி நியமனம் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுடன் முதல்-மந்திரி ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அவர்களுக்கு பணி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.