அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான, மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி பங்கேற்றார்.
உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வீரபாகு தலைமையில், அரியலூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் முருகன், செந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் 20 பேர் பங்கேற்று பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஏரி குளங்களில் குளிக்க சென்றவர்கள் தவறுதலாக விழுந்து விட்டால், அவர்களை காப்பாற்றி மீட்பது. படகுகளில் சென்று தீவிர தேடுதல் நடத்தி, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி மீட்டு அழைத்து வருவது.
பேரிடர் காலங்களில் தரைமட்டமான கான்கிரீட் வீடுகளில், இரும்பு கம்பிகளை உடைத்து மனிதர்களை மீட்பது. மழைக்காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை, வெட்டி அப்புறப்படுத்துவது. இரவு நேரங்களில் பேரிடர் நடைபெறும் இடத்திற்கு, தீயணைப்பு வாகனத்தில் இருந்து உயர் மட்ட கோபுரம் அமைத்து வெளிச்சம் தருவது,
மற்றும் பெட்ரோல் லேம்ப் மூலம் 6 அடி உயரத்திற்கு எமர்ஜென்சி மின் வெளிச்சம் பெறுவது ஆகியவற்றின் செயல் விளக்கத்தினை தீயணைப்பு வீரர்கள் நேரடியாக செய்து காண்பித்தனர்.
மேலும் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கியவர்களை காப்பாற்ற செல்லும் தீயணைப்பு வீரர்கள் அணிந்து கொள்ளும், ஆக்ஜிஜனுடன் கூடிய நீர் மூழ்கிக் கவாச உடை அணிந்து ஆற்றில் தத்தளிப்பவர்களை அல்லது மூழ்கியவர்களை காப்பாற்றி அழைத்து வருதல் ஆகியவற்றிற்கான செயல் விளக்கத்தை எடுத்துக் கூறினர். வீடுகளில் மற்றும்
சமையல் அறைகளில் ஏற்படும் சிறிய தீ விபத்துகளை, உடனடியாக தீயணைப்பு கருவிகள் கொண்டு அணைப்பது மற்றும் வீட்டில் உள்ள சாக்கை தண்ணீரில் நனைத்து உடனடியாக தீயை கட்டுப்படுத்துவது ஆகியவற்றிற்கான செயல் விளக்கத்தையும் செய்து காண்பித்தனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.