அரியலூர் மாவட்டத்தில் , பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்த் தேக்கத் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், கை பம்புகள் மற்றும் சிறிய அளவிலான நீர்த் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளின் விவரம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவது குறித்தும் எந்தெந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது என்ற விவரம் குறித்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா கூறியதாவது:
கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு மாற்று வழிகளில் குடிநீர் வழங்கிட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வழங்க வசதி உள்ள இடங்கள் குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் தேவைப்படும் இடங்கள் குறித்தும் ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கிணறுகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பணிகளை விரைவுபடுத்தவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக குடிநீர் குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள் தொடர்பாக வெளிவரும் செய்திகளின் மீது தனிக்கவனம் செலுத்தி அப்பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது பயன்பாட்டில் இருந்து கோடை காரணமாக பயன்தராத பழைய ஆழ்துளை கிணறுகள் உள்ள இடங்களில் அதனை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் , சரிசெய்ய இயலாத ஆழ்துளை கிணறுகள் உள்ள இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோடைக்காலம் என்பதால், பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து திருமழபாடி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் சேகரிப்பு கிணற்றினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பார்வையிட்டு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்;தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதை ஆய்வு செய்து நாளொன்றுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறித்தும், வரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் லெட்சுமணன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லோகநாதன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித் துறை) மாது, உதவி திட்ட அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.