வி.இசட். துரை இயக்கத்தில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்துள்ள “தலைநகரம் 2” படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் டைரக்டர் சுந்தர். சி பங்கேற்று பேசும்போது, “திரையுலகில் இதுபோன்ற விழாக்கள் நடப்பது அரிதாகி விட்டது. அதனால்தான் இசைவிழாக்களிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடும் நிலைமை இருக்கிறது. இந்தப்படத்தை 350 தியேட்டர்களில் போடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் பயந்துவிட்டேன்.
இப்போதெல்லாம் படம் ரிலீசாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் சினிமா காட்சிகள் ரத்தாகும் நிலைமை இருக்கிறது. அப்படிப்பட்ட கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத்தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம் 2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.