Skip to content
Home » ஏமாற்றி விட்டதாக கோவை வாலிபர் மீது டைரக்டர் பார்த்திபன் புகார்

ஏமாற்றி விட்டதாக கோவை வாலிபர் மீது டைரக்டர் பார்த்திபன் புகார்

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான் ஆர்.பார்த்திபன், சென்னை நந்தனம் 7-வது வீதியில் வசித்து வருகிறார். இவர், கடந்தாண்டு டீன்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்தப் படத்துக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்ய வேண்டியிருந்தது. இதையடுத்து கோவை பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இதற்கான பணிகளை நடிகர் பார்த்திபன் ஒப்படைத்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் அந்த ஸ்டுடியோவின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணி மேற்பார்வையாளராக உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிக்கு ரூ.68 லட்சத்து 54 ஆயிரத்து 400 தொகை செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் முதல் கட்டமாக ரூ.42 லட்சத்தை சிவபிரசாத்திடம் கடந்தாண்டு கொடுத்துள்ளார்.

ஆனால், கூறியபடி படத்துக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை சிவபிரசாத் தரப்பினர் செய்து தரவில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து பார்த்திபன், சிவபிரசாத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்துக் கொடுப்பதாகவும், அதற்கு, முன்னர் கூறியதைவிட கூடுதலாக ரூ.88 லட்சத்து 38 ஆயிரத்து 120 தொகை செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பணியை முடித்துக் கொடுப்பதாக கூறிவிட்டு, கூறியபடி பணியை செய்து முடிக்காமல் கூடுதல் பணம் கேட்டதால், திட்டமிட்டபடி ‘டீன்ஸ்‘ படத்தை பார்த்திபனால் வெளியிட முடியவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, நடிகர் பார்த்திபன் ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், ‘பணத்தை பெற்றுக் கொண்டு, கூறியபடி படத்துக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை செய்து கொடுக்காமல், கூடுதல் பணம் கேட்கும் சிவபிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி இருந்தார். அதன் பேரில் போலீஸார், சிவபிரசாத் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *