Skip to content
Home » தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக 51வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.  இது குறித்து  துணைவேந்தர் திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம் மொழியியல் கற்றல், கற்பித்தல், தேசிய கல்விக்கொள்கை, மாநிலக் கல்விக் கொள்கை இலக்கியம், ஒப்பிலக்கியம். மொழிபெயர்ப்பு தொடர்பாக, இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நடைபெற்று வரும் ஆய்வுகள், அதன் போக்குகள் ஆகியவற்றை இளம் தலைமுறையினரின் பார்வைக்குக் கொண்டு வருவதே ஆகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு 2வது முறையாக நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1983- ஆண்டில் 13-வது அனைத்து இந்திய திராவிட மொழியியலாளர்கள் மாநாட்டினைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தி முத்திரை பதித்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், உலகின் சிறந்த மொழியியலாளர்கள் வரிசையில் முதல்வரிசையில் இருந்த அறிஞருமான முனைவர் வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த “அகில இந்திய திராவிட மொழியியலாளர் கூட்டமைப்பு”.

அவருடைய நல்முயற்சியில் கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத்தலைவரும் பேராசிரியருமாகத் திகழ்ந்த துணைவர் ஹிராமத், திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் மகாதேவ சாஸ்திரி ஆகியோர் இணைந்து 1971ம் ஆண்டில், அகில இந்திய திராவிட மொழியியலாளர் கூட்டமைப்பின் முதல் மாநாட்டினை நடத்த முடிவெடுத்து, அதைத் திருவனந்தபுரத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

இம்மாநாட்டில் திராவிட மொழியியலுக்காக முதல் ஆய்விதழும் வெளியிடப்பட்டது. அந்த ஆய்விதழில் உலகின் பல்வேறு பகுதிகளின் அறிஞர்கள் திராவிட மொழிகள் குறித்த கட்டுரைகளை எழுதி சிறந்ததொரு தொடக்கத்தை ஏற்படுத்தி வைத்தனர். இந்நிலையில் 1977-ம் ஆண்டு பன்னாட்டுத் திராவிட மொழிகள் நிறுவனம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. இதன் சார்பாகவும் ஆய்விதழ்கள் வெற்றிகரமாகக் கொண்டு வரப்பட்டு, உலக மொழியியலாளர்கள் சங்கமிக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகப் பரிணமிக்கத் தொடங்கியது.

திராவிட மொழியியல் கூட்டமைப்பின் தற்போதைய இயக்குநராக கேரளப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ஜி.கே.பணிக்கர், என்.பி.உன்னி, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கி.கருணாகரன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டிற்கு உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆய்வாளர்கள் வருகை தரவுள்ளனர். நூற்றுக்கணக்கானக் கட்டுரையாளர்கள் 4 தனி அமர்வுகளில் ஆய்வுத் தாளைச் சமர்ப்பிக்க உள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் ஆய்வுத்தாள் வாசிப்பதற்கென்று இணையவழி அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 183 வெளியீடுகளை அரை நூற்றாண்டுக்காலமாக வெளியிட்டுள்ள திராவிட மொழியியல் கூட்டமைப்பின் சேகரிப்பில் ஏறத்தாழ 43000 நூல்கள் எதிர்கால இளந்தலைமுறைக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. திராவிட மொழியியல் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஒரு புத்தகக் கண்காட்சியும் இடம் பெறவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்,

பேட்டியின் போது களப்புலத்துறை தலைவர் இளையாப்பிள்ளை, வளர் தமிழ்புல துறைத்தலைவர் குறிஞ்சி வேந்தன், சுவடிகள் புல துறைத்தலைவர் கண்ணன், துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், மொழியியல் துறைத் தலைவர் மங்கையர்கரசி, மக்கள் தொடர்பு அதிகாரி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!