அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான டிகே என செல்லமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லுக்கு விடைகொடுத்தார். இதை அறிவித்தபோது அவரால் சோகத்தை அடக்க முடியவில்லை என்பதை அவரது முகமே காட்டிக்கொடுத்தது. ஆனாலும் அவர் ரசிர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.
விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர். அப்போது அவர் தனது கையுறைகளை கழற்றி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் பாராட்டையும் ஏற்றுக்கொண்டார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல், 17 ஆண்டுகள் விளையாடிய வீரர்களில் 38 வயதான தினேஷ் கார்த்திக்கும் ஒருவர்.(வரும் ஜூன் 1ல் 39வது பிறந்தநாளை காண்கிறார்) மொத்தம் 257 போட்டிகளில் ஆடிய அவர் 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 22 அரை சதங்கள் அடக்கம். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஆடி 326 ரன்களை சேர்த்த அவர், மீண்டும் ஒரு முறை ஆர்சிபி-க்கு ஃபினிஷராக செயல்பட்டார்.
2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் 2022 நவம்பர் 2ம் தேதி ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் வங்கதேசத்திற்கு எதிரானபோட்டியில் ஆடினார். அதன் பிறகு இந்திய அணியில் விளையாட வில்லை. எனவே தற்போது அவர் ஐபிஎல்லில் இருந்து விடைபெறுவதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டுக்குமான விடைபெறுவதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.