திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் இரு வழிச்சாலை பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக பணம் வசூலிப்பதற்கான கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த பெயர் பலகை, கவுன்டர்களை அடித்து நொறுக்கினர். இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.