திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தசாமி (83). ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோவிந்தசாமி தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தநகரில் வசித்துவந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி சிகிச்சைக்காக திருச்சி ஏபிசி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி நேற்றிரவு காலமானார். மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் கோவிந்தசாமிக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த 1980ம் ஆண்டுகாலகட்டங்களில் கோவிந்தசாமி நிருபராக பணியாற்றிய போது நாகை மற்றும் கோடியக்கரை பகுதிகளில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்த செய்திகளுக்காக துணிச்சலாக சென்று பலநாட்கள் தங்கி கட்டுரைகளை எழுதி பாராட்டை பெற்றவர். அதே போல் கடைசி வரை சிறிய அன்பளிப்பை கூட வாங்காத நேர்மையான பத்திரிக்கையாளராக வாழ்ந்தவர் கோவிந்தசாமி.. திருச்சி பகுதிகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தினமலர் கோவிந்தசாமி என்றால் சிம்மசொப்பனம். ஏராளமான இளம் பத்திரிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்த பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமியின் மறைவிற்கு etamilnews ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..