அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். திருச்சியில் நடந்த மாநாட்டில்,சசிகலாவை சின்னம்மா என்று அழைத்து பேசினார். இந்தநிலையில் ஓபிஎஸ் இன்று மாலை 7.15 மணியளவில், சென்னை அடையாறில் உள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் வீட்டுக்கு சென்றார். அவருடன், பண்ருட்டி ராமசந்திரனும் சென்றார். இருவரையும் வாசல் வரை வந்து தினகரன் வீட்டிற்குள் அழைத்து சென்றார். மேலும் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். இதன்பின் இருதரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது.
மேலும் 5 மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாநாட்டில் பங்கேற்க தினகரனை அழைக்கவே இந்த சந்திப்பு. அடுத்ததாக சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திப்பார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஓபிஎஸ் இறங்கி உள்ளார் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.