Skip to content

மகளை டாக்டராக்கும் கனவு.. டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு காரணம் ?

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (46). இவர், கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். இவர் கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி கோவை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரது அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கிறது. முகாம் அலுவலகம் (வீடு) ரெட்பீல்டு பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் தான் டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மனைவி கீதாவாணி (42), மகள் நந்திதா (18) ஆகியோருடன் தங்கி இருந்தார். டிஐஜி விஜயகுமார் தினமும் காலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கிங் செல்வது உண்டு.  மேலும் நடைபயிற்சியை முடித்ததும் முகாம் அலுவலக வளாகத்திலேயே பூப்பந்து விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 6.50 மணிக்கு நடைபயிற்சி செல்வதற்காக புறப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார் டிஐஜி விஜயகுமார். அப்போது அவருடைய பாதுகாவலர் ரவிச்சந்திரனும் அங்கு வந்தார். வீட்டை விட்டு வெளியே வந்த டி.ஐ.ஜி. விஜயகுமார் அங்குள்ள வராண்டாவில் பரபரப்புடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருந்தார். பின்னர் அவர் திடீரென்று தனது பாதுகாவலரிடம் இருந்து கைத்துப்பாக்கியை (ஏர் பிஸ்டல்) கொடு என்று கேட்டு உள்ளார். உயர் அதிகாரி துப்பாக்கியை கேட்டதால், பாதுகாவலரும் எந்த கேள்வியும் எழுப்பாமல் தன்னிடம் இருந்த துப்பாக்கியை டி.ஐ.ஜி. விஜயகுமாரிடம் கொடுத்தார். துப்பாக்கியை வாங்கியதும் வீட்டின் முன்பகுதியில் உள்ள போர்ட்டிக்கோ பகுதிக்கு விஜயகுமார் வேகமாக சென்றார். பின்னர் அந்த வேகத்தில் தனது தலையின் வலது புறம் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் வலது புறத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு இடதுபுறம் வழியாக வெளியே வந்தது. இதனால் டி.ஐ.ஜி. விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதற்கிடையே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதை கேட்டதும் பாதுகாவலர் ரவிச்சந்திரன் போர்ட்டிக்கோ பகுதிக்கு ஓடிச்சென்றார். அதுபோல் வீட்டிற்குள் அறையில் இருந்த டி.ஐ.ஜி.யின் மனைவியும் வெளியே வந்தார். அங்கு விஜயகுமார், கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருடைய கையில் கைத்துப்பாக்கி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஜயகுமாரின் தந்தை செல்லையா ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். தாய் ராஜாத்தி ஓய்வுபெற்ற ஆசிரியை. விஜயகுமாருக்கு பிரேமலதா என்ற அக்காளும், நிர்மலாதேவி என்ற தங்கையும் உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கீதாவாணி, மகள் நந்திதா ஆகியோரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்டார். இவருடைய மனைவி கீதாவாணி. டாக்டரான இவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் ஆவார். இவர்களுக்கு நந்திதா என்ற ஒரே மகள் உண்டு. அவரை டாக்டராக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆசைப்பட்டார். இதற்காக அவர் தனது மகளை நீட் தேர்வும் எழுத வைத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கீதாவாணி மார்க் வாங்கவில்லை என தனது நண்பர்களிடம் டிஐஜி விஜயகுமார் வருத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த மார்க்கிற்கு எந்த மருத்துவக்கல்லூரியில்  இடம் கிடைக்கும் என அவர் வருத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக டிஐஜி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *