கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்கிற பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்திய துப்பாக்கிக்கு சொந்தக்காரான பிஎஸ்ஓ ரவிச்சந்திரன் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.. அதில் நான் ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக (எண்.297) பணியாற்றினேன். கடந்த 2016 முதல் டிஐஜி அலுவலகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன். எனக்கு 99 எம்.எம் ரக பிஸ்டல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி டிஐஜி விஜயகுமார் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது, டிஐஜி அவரது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அவர் கோவை சரகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் வந்ததில் இருந்து சரியாக தூக்கம் வரவில்லை என மாத்திரை எடுத்துக் கொள்வார். நான் முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி இருந்தேன். டிஐஜி தினமும் காலை 7 மணிக்கு டிஎஸ்ஆர் எனகூறப்படும் போலீஸ் ஸ்டேஷன் வழக்கு விவரங்களை பார்ப்பதற்காக கீழே உள்ள தனி அறைக்கு வருவார். 6ம் தேதியும் காலை 6.30 மணிக்கே வந்தார். முகாம் அலுவலகத்தில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சிக் கொடுத்தார். காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு டிஐஜி வந்து டிஎஸ்ஆர் எங்கே என கேட்டார். நான் அதை எடுத்து கொடுத்தேன். அதன்பின், நான் தங்கியிருந்த அறையில் எப்போதும் போல் துப்பாக்கி வைத்திருக்கும் இடத்திற்கு டிஐஜி சென்றார். என்னிடம் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியுமா?, இதில் புல்லட் ேலாட் செய்து விட்டாயா? என கேட்டு கொண்டே துப்பாக்கியுடன் அறையை விட்டு வெளியே சென்றார். நான் டி-சர்ட்டை அணிந்து வெளியே வருவதற்குள் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. நானும், முகாம் அலுவலகத்தில் அறையில் இருந்த டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம். அப்போது, டிஐஜி மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். துப்பாக்கி அங்கேயே கிடந்தது. அவரது மனைவிக்கு தகவல் சொல்வதற்காக அன்பழகனும், நானும் சத்தம் போட்டுக்கொண்டே மேலே ஓடினோம். உடனே அறையிலிருந்து வெளியே வந்த அவரது மனைவி கீதா என்ன ஆச்சு என கேட்டார். நடந்த விவரத்தை சொன்னதும் அவர் ஓடி வந்து பார்த்தார். பதறியபடி அவரும், நாங்கள் இருவரும் ஜீப் மூலமாக டிஐஜியை கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் கொண்டு வந்து சேர்த்தோம். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு டிஐஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர் இவ்வாறு பிஎஸ்ஓ ரவிச்சந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்..