நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 2 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். சி.பி.என்-யூ.எம்.எல். கட்சியின் வேட்பாளராக தேவ் ராஜ் கிமிரே மற்றும் நேபாள காங்கிரசின் வேட்பாளராக ஈஷ்வரி நியூபனே ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள் இருவரும் நேற்று முறைப்படி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில், தேவ் ராஜ் கிமிரே இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மொத்தம் 167 ஆதரவு வாக்குகள் கிடைத்தன என தி காத்மாண்டு போஸ்ட் தெரிவிக்கின்றது. அவர் நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும், மாகாணம் 1-ன் பொறுப்பு தலைவராகவும் உள்ளார். அவருக்கு எதிராக குறைந்தது 100 வாக்குகள் பதிவாகி இருக்கும். ஓர் உறுப்பினர் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. 275 பேர் கொண்ட கீழவையில் 138 வாக்குகள் வெற்றி பெறுவதற்கு அவசியம். சபாநாயகராக கிமிரே தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை பழம்பெரும் நாடாளுமன்றவாதியான பசுபதி ஷம்ஷேர் ராணா அவையில் இன்று அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து துணை சபாநாயகருக்கான தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.