தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு , இன்று காலை 9.45 மணியளவில் சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சின்னமலை நினைவுநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின்
ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியினருக்கு 17.4.1756 ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பல பயிற்சிகளைப் கற்று சிறந்து வீரராக திகழ்ந்தார். கொங்கு நாட்டை மைசூர் மன்னர் ஆட்சி புரிந்ததால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் மன்னருக்குச் சென்றது. இத்தகவலை அறிந்த தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார். வரி கொண்டு சென்ற தண்டல்காரர்களிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று கூறியதால் அன்று முதல் ‘சின்னமலை’ என்ற பெயர் பெற்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
தீரன் சின்னமலை ஆன்மிக பணிகளில் சிறந்து விளங்கிய காரணத்தினால் திருக்கோவில்களுக்குப் பல்வேறு திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் காட்டினார். மேலும் தமிழ் புலவர் பெருமக்களையும் ஆதரித்து வந்தார். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரையிலும், 1802 ம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை மாபெரும் வெற்றி பெற்றார். தீரன் சின்னமலை அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி 31.07.1805 அன்று சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.